Tuesday, 27 September 2016

RAVICHANDRAN ரவிசந்திரன் திரை உலகில் ஆணவத்தால் அழிந்து போனவர்

RAVICHANDRAN ரவிசந்திரன் திரை உலகில் ஆணவத்தால் அழிந்து போனவர் 

ரவிசந்திரன் இயற் பெயர் பி எஸ் ராமன் 

திருச்சியில் படிப்பை முடித்துவிட்டு மருத்துவ கல்லூரியில் சேர சென்னை வந்தார்  அத்தோடு அவர் நாடக  நடிகராகவும் இருந்தார்.

திமுக அனுதாபி  

ஆணையிடுங்கள் அண்ணா மற்றும் உதய சூரியன் என்று இரண்டு நாடகங்களில் நடித்திருந்தார் 


திரை உலகில் இயக்குனர் ஸ்ரீதர் கல்யாண பரிசு படத்தில் பத்மினி மற்றும் சாவித்திரி நடிப்பதற்கு இருந்தது  அதை மாற்றி விஜயகுமாரி சரோஜாதேவி என்று மாற்றி போட்டு படம் வெள்ளிவிழா ஓடியது 

அடுத்து கன்னட நடிகர் கல்யாணகுமாரை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற திகில் படத்தையும் எடுத்தார். கதா நாயகியும் புது முகம் தேவிகா 


அப்புறம் அடுத்து எல்லாமே புதுமுகங்கள் தான் 

எனவே சென்னைக்கு வந்த ராமன் ஸ்ரீதர் உதவியாளரிடம் தன்னுடைய சென்னை ஓட்டல் முகவரி போன் நம்பர் கொடுத்து விட்டு வந்திருந்தார் 

அப்போதெல்லாம் புகை வண்டி 100 கிலோமீட்டருக்குள் தான் பாசெஞ்சாராய் ஓடும் .மெயில் எப்போதாவது தான் 
காலை 11மணிக்கு சென்னை டூ திருச்சி வண்டி  புறப்படும் 
தவறினால் மறுநாள் தான். 


இல்லாட்டி பாசஞ்சர் பிடித்து ரெண்டு மூணு ரயில்  மாறனும் அந்த ரயிலை தவற விட்டு விட்டார் ரவிசந்திரன் 

அன்று தான் விதி விளையாடியது 
ஸ்ரீதரை ரவிசந்திரன் சந்தித்தார் 

"மே ஐ கமின்.?"
"உள்ள வாங்க.!"
"இங்க டைரக்டர் யாருங்க.!
நான் ஹீரோ சான்ஸ் கேட்டு வந்துருக்கேன்.!"

"நான்தான் டைரக்டர்.! உக்காருங்க.!"
"தாங்க்ஸ்.!"

சிகரெட் பாக்கெட்டை திறந்த டைரக்டர் "ஹேவ் இட் "என்றார் மரியாதைக்காக.!

வாய்ப்பு தேடி வந்தவர் எந்த தயக்கமும் இன்றி
 "தாங்க்ஸ்."என்றபடி சிகரெட்டை எடுத்துக் கொண்டு விட்டார்.
இருவரும் தம்மடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.நடிகர் 


ஆனால் ஸ்ரீதர் கேள்விக்கு எடக்கு மடக்காகவே பதில் சொன்னார் ஏனென்றால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு 
நடிகர் சிவகுமார் தெரிவு செய்யப்பட்டு இருந்தார் 

தனக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று அறிந்த ரவிசந்திரன் கேட்ட கேள்வி எதற்கும் ஒழுங்கா பதில் சொல்லல வேண்டுமென்றே  திமிராகவே பதில் கொடுத்தார் 

அப்புறம் போன பிறகு அசிஸ்டெண்டிடம் டைரக்டர் சொன்னார்.
"இவன்தான் நம்ம படத்துல ஹீரோ.!"

இப்படிப்பட்ட திமிர் பிடித்த இளைஞன் வேடம் தான் இந்த படத்திற்கு தேவை என்று ஸ்ரீதர் கூறினார் 

Tuesday, 20 September 2016

எம்ஜியாரின் நன்றி உணர்வுஎம்ஜியாரின் நன்றி உணர்வு 

ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. 

விழா மேடையில் கலைஞர்கள், 
பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக 
மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... 


இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : 
முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். 

இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!

மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!


குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!

திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...
அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : 

"நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும்.


 "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா 
அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???

ஆனால் எம் .கே .ராதா காலில் விழுவது முதன் முதலில் நீரும் நெருப்பும் படம் ரிலீசான 1971 அக்டொபேர் 18 ஆம் தேதிதான் .

இந்த படம் ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீ மேக் படம் ஆகும் .எம் கே ராதா மதியம் ஷோ பார்த்து விட்டு தியேட்டரை 
விட்டு வெளி வந்து கொண்டிருந்தார் .மழையும் பெய்து கொண்டிருந்தது .அந்த நிலைமையில் கொட்டும் மழையில் 1000 கணக்கான ரசிகர்கள் 

முன்னிலையில் நடந்தது  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி இது ராணுவம் போன்றது .உள்ளே நுழைந்தவர்கள் அனுமதியின்றி வெளியில் வர முடியாது 
அப்படி ஓடி விட்டால் திருட்டு பட்டம் கட்டி போலீசில் சொல்லி விடுவார்கள் .மிரட்டல் ,அடி,உதை தான் .அங்குதான் எம்ஜியார் 

பெண் வேடம் போட்டு நடித்து கொண்டிருந்தார் .அப்போது கந்தசாமி முதலியார் சத்திய பாமாவிடம் உங்கள் பிள்ளைகளை கூட்டி கொண்டு போகலாம் என்றிருக்கிறேன் .அப்படியா தாராளமாய் கூட்டி செல்லுங்கள்.


முதலாளி சச்சிதானந்த பிள்ளை உடும்பு பிடியாய் எம்ஜியாரையும் ,சக்கரபாணியையும் அனுப்ப மறுத்தார் . ஆனால் சத்தியபாமா விடவில்லை .ஆவேசமாய் சண்டை போட்டு விட்டு உங்களால் என்ன முடியுமோ பார்த்து கொள்ளுங்கள் என்று பிள்ளைகளை கூட்டி கிளம்பி விட்டார் .அந்த கந்தசாமி முதலியார் தான் - எம் கே .ராதாவின் தந்தை .சம்பவம் 1930 வாக்கில் நடந்தது  .    
Sunday, 11 September 2016

N S கிருஷ்ணனின் கடைசி நாள்...

N S கிருஷ்ணனின் கடைசி நாள்...


தமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர். 
ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித்த "அம்பிகாபதி" படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.

அப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகஸ்டு 30ந்தேதி காலை 11.10 மணிக்கு, தமது 49வது வயதில் காலமானார். செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரை உலக நட்சத்திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். 
பலர் கண்ணீர் விட்டு அழுதனர். வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கதறினார்.

மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது. "சிதை"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார்.

 நாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.

எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, "அம்பிகாபதி" வெளிவந்தது. படத்தில், அவர் இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.


தமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். வருமானத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை வெறும் கையுடன் அனுப்பமாட்டார்.

பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார். கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார். 
பின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார்.

ஆரூர் முனா செந்திலு

Thursday, 8 September 2016

நேரா உட்லண்ட்ஸ் போய் மசாலா தோசை சாப்பிட்டு , ஒரு பாக்கட் சிகரெட் வாங்கணும் - ரஜினி


நேரா உட்லண்ட்ஸ் போய் 
மசாலா தோசை  சாப்பிட்டு ,
ஒரு பாக்கட் சிகரெட் வாங்கணும் 
 - ரஜினி  

நடிப்பு படிப்பு முடிய சில நாட்கள் இருக்கையில் பாலசந்தரைப் பார்க்க போகிறோம் என்று அறிந்தபோது ரஜனிக்கு ஏற்பட்ட உணர்வுசென்னை நடிப்பு பயிற்சி கல்லூரியில், ரஜினியின் படிப்பு முடிவடைவதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், அங்கு டைரக்டர் கே. பாலசந்தர் வந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போகிறார் என்று அறிவித்தார்கள்.

அதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தை பார்த்தது முதல், அவருடைய பரம ரசிகராகியிருந்தார். பாலசந்தர் படங்களை ஒன்று விடாமல் பார்க்கலானார்.


பாலசந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று அறிந்த போது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி பற்றி ரஜினி கூறுகிறார்.
பாலசந்தரின்  அரங்கேற்றத்தை பார்த்த போது, 
சிரித்திருக்கிறேன்; 
அழுதிருக்கிறேன்; 
உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்; 
பிரமித்துப் போயிருக்கிறேன்.

பிறகு ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தொடர்ந்து 4 தடவை பார்த்தேன்.. அவர் போட்டோவை பத்திரிகையிலே பார்த்திருந்தேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிட்டியூட்டுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தது. எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரைச் சந்திக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

அந்த  நாளும் வந்தது. 
பிரின்சிபல் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, 
‘பாலசந்தர் சார் இருபது நிமிடம் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். இங்கே இருபது நிமிடம்தான் இருப்பார். ஆகவே, நிறைய கேள்விகளைக் கேட்காதீர்கள். நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள்’ என்று கூறினார்.


எல்லோரும் ஆவலாக காத்திருந்தோம். இரண்டு பேர் வேகமாக வந்தார்கள். எங்கள் பிரின்சிபல்தான் பாஸ்ட் (வேகம்) என்றால், அதைவிட ‘பாஸ்ட்’ பாலசந்தர் சார்! எனக்கு வேகம்தான் பிடிக்கும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி! எங்க அப்பா கொடுத்த பயிற்சி அப்படி!  பாலசந்தர் சார், பார்க்க சின்னப்பையன் மாதிரி இருந்தார். நான் அவரைப் பார்த்து அசந்து போய்விட்டேன். 

என் கண்கள் மட்டும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. மனம் அவர் படங்களை நினைத்துக் கொண்டிருந்தது. என் பெயரைக் கேட்டார் அது எனக்குக் கேட்கவில்லை. ஏனென்றால் என் மனம் அங்கே இல்லையே! பிறகு சட்டென்று உணர்வு வந்தது. 

சிலிர்த்து எழுந்து ‘சிவாஜிராவ்’ என்றேன்.
அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.

எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். 
நானும், ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் என் ஸ்டைலில் வேகமாக ஒரு கேள்வி கேட்டேன். ‘ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிaர்கள்?’ என்பதுதான் நான் கேட்ட கேள்விக்கு தமிழ் அர்த்தம்.
நான் வேகமாகக் கேட்டதால், அவருக்கு புரியவில்லை.

‘சாரி புரியவில்லை’ என்றார்.

நான் நிறுத்தி- நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
பாலசந்தர் சிரித்துக் கொண்டே, ‘நடிகன் வெளியே நடிக்கக்கூடாது’ என்றார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு, மீண்டும் என பெயரைக் கேட்டார் ‘சிவாஜிராவ்’ என்று கூறினேன்.

20 நிமிடங்கள் முடிந்தன. பாலசந்தர் புறப்பட்டார். அவர் என்னை நோக்கி கையை நீட்டினார். நானும் கை நீட்டினேன். அவர் கையில் என் கை! அவர் கையில்தான் என்ன பிடிப்பு! அருகிலிருந்த பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார்!

எங்கள் ஆசிரியர் கோபாலி அப்போது வந்தார். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘சார் உங்க படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர் கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!’ என்று அவர் பாலசந்தரிடம் கூறினார்.


பாலசந்தர் சிரித்தபடி, ‘உனக்கு தமிழ் தெரியுமா?’என்று கேட்டார்.
‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தமிழில் சொன்னேன்.
‘உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது’ என்று பாலசந்தர் சார் சொன்னார்.

முதலில் அதை கத்துக்கோ ! என்கிறார் ....சென்றார் 
பிறகு, ‘நான் வருகிறேன்’ என்று விடைபெற்றுக் கொண்டார். 
கோபாலியுடன் பேசிக்கொண்டே காருக்குச் சென்றார். ‘எம்.எஸ்.எல். 363’ எண் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

அவர் போனதும் கோபாலி என்னிடம் வந்தார்.
 ‘பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார்’ என்றார்.
எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் எதற்காக என்னை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறதோ என்று மனம் குறுகுறுத்தது.


பாலசந்தர் சாரின் அழைப்பு வரும் என்று ஆவலோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அழைப்பு ஏதும் வரவில்லை. முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. எல்லோரும் சொல்கிற மாதிரி, ஒரு பேச்சுக்காக அப்படி சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். அந்த விடயத்தை அத்துடன் மறக்க முயன்றேன்.


இந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. உடனே புறப்பட்டு வா! என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.
என்றைக்கும் இவ்வளவு அவசரமாக ரஜினியை அவர் அழைத்தது 

இல்லை. ஆகவே, என்னவோ, ஏதோ என்று எண்ணியபடி, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பெங்களூரூக்குப் புறப்பட்டார்.

பெங்களூரில் ரஜினியை வேலையை விட்டு தூக்கியிருந்தார்கள் .

மறுபடி சென்னை ..அதே அமிஞ்சிக்கரை அருண் ஹோட்டல் .
பாத் ரூமில் சோலோ நடிப்பு ,
நண்பர்கள் கொடுத்த சிகரெட் என்று 2 மாதம் போனது 
அலுப்பும் துயரமும் நிறைந்த வாழ்க்கை 

1975 ஒருநாளில் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு .
அவ்வளவுதான் .
மனம் துடித்தது .

இதயம் அதைவிட துடித்தது .
பாலசந்தர் வெளியில் உட்கார சொன்ன போது பரபரத்தார் 

சீட்டுல சாஞ்சி உக்காந்தா தப்பா நினைச்சிக்குவாரோ ன்னு பயம் 
சீட்டு நுனியில் உக்காந்தா சீட்டு எங்க சாஞ்சிருமோன்னு ஒரு பயம் 
நடுவில உக்காந்தா எங்க தொப்பை தெரிஞ்சிடுமோன்னு பயம் 

இதுல வேர்வையில் நனைஞ்சி சட்டை கூட ஒட்டிக்கிடிச்சி 

ஒருவழியா பாலசந்தர் ஏதாவது நடிச்சி காட்டு என்கிறார் .
உடனே கிரீஸ் கர்நாட்டின் துக்ளக் நாடகம் ஞாபகம் வந்தது .
அதுல ஒரு ஸீன் நடிச்சி காட்டினார் .ரஜினி .சரி நாளை காலை
5 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்திடு என்கிறார்  .பலநாள் காத்திருந்து தேக்கி வச்ச நடிப்பு .
நாளைக்கு மட்டும் சான்ஸ் கெடைச்சி ஓகே ஆயிட்டா ...நேரா உட்லண்ட்ஸ் போய் மசாலா தோசை சாப்பிட்டு ,ஒரு பாக்கட் சிகரெட் வாங்கணும்   


Monday, 5 September 2016

புதிய வார்ப்புகள் ... பாக்கியராஜ் வார்க்கப்பட்டது இப்படியா !!!!???????


புதிய வார்ப்புகள் ...
பாக்கியராஜ் வார்க்கப்பட்டது இப்படியா !!!!??????? 


"எங்க சார் ஹீரோவ இன்னும் காணோம்.?"


"பாத்துக்கலாம்யா.!
நீ அந்த பொட்டிய எடுத்துட்டு குடைய பிடிச்சுட்டு வாய்யா ராஜன்.!"

"அது ஹீரோ ஊருக்குள்ள எண்ட்ரி 
ஆகிற சீன் சார்.!"

"சும்மா ஒரு ரிகர்சல் பார்ப்போம்யா.!"


 ராஜன் பெட்டி,குடையோடு நடந்து வந்த போது கட் என்றார் டைரக்டர்!

"ரிகர்சல்னு சொல்லிட்டு உண்மையாவே எடுக்கிறீங்க.?"

"ஆமாய்யா.!
இந்த படத்துல நீதான் ஹீரோ.!"


"சார் நான் அசிஸ்டெண்ட் டைரக்டர்! "

"எவனேவனையோ நடிக்க வைச்ச என்னால உன்னை நடிக்க வைக்க முடியாதா.?"அசிஸ்டெண்ட் பாக்யராஜ்,
டைரக்டர் பாரதிராஜா.


படம் புதியவார்ப்புகள்.!

ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் .. வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு திருமணம் ஆகவே இல்லைஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..
வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு 
திருமணம் ஆகவே இல்லைவெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நிர்மலாவின் சொந்த ஊர் கும்பகோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக்மணி. 

பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்றத்தில் "ஜுரி"யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு "ஜுரி" என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியில் நியமிப்பார்கள். நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். "அரண்மனைக்குடும்பம்" என்று பட்டப்பெயர் பெற்றவர்கள். நிர்மலாவின் குடும்பத்துக்கும், கலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந்தது எதிர்பாராமல் நடந்தது. 


ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப் பேசினார். "ராஜராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்" என்று கூறினார். 

இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்மலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நடனக் கலைஞரிடம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார். 


நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோணத்தில் நடைபெற்றது. பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இதனால் நிர்மலாவின் தந்தை வருத்தம் அடைந்தார். 


"சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்" என்று சபாவைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். நிர்மலா, நடனத்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜயந்திமாலா நடத்தி வந்த "நாட்டியாலயா" என்ற நடனப்பள்ளியில், நிர்மலாவை அவர் தந்தை சேர்த்து விட்டார். பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செலவு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், "படம் எடுக்கக்கூடாது" என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத்தயாரிப்பைத் தொடராமல் பாதியில் கைவிட்டார், பாலகிருஷ்ணன். 

இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, "வெண்ணிற ஆடை" என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார். 
பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலாவின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த்தார். "இவ்வளவு அழகான பெண், சினிமாவில் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்" என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந்தித்து, "டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார். நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர்மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் சென்று, ஸ்ரீதரை சந்தித்தார். 

"மேக்கப்" டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார்.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு புதுமுகம் தேடி கொண்டிருந்தார் ஸ்ரீதர் .
அப்போது நடிகைகள் தேர்வு முடிந்து விட்டிருந்தது .எனவே அடுத்த படத்தில் சான்ஸ் தருகின்றேன் என்கிறார் . அடுத்த படம் தான் வெண்ணிற ஆடை படம் .இந்த படத்திலும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஸ்ரீதர் முதலில் சான்ஸ்  கொடுக்கவில்லை . வட இந்திய சூப்பர் ,டூப்பர் ஸ்டார் ஹேமாமாலினி நடித்தார் .அவர் ஒல்லியாய் இருந்ததால் அந்த படத்தில் இருந்து தூக்கினார் . அப்புறம் அந்த வேடத்தில் அழகு மங்கையாய் நிர்மலா ஜொலித்தார்   "வெண்ணிற ஆடை"யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1965-ம் ஆண்டு "வெண்ணிற ஆடை" வெளிவந்தது. இப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார். 
அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு. மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்த படம் என்பதால் "வெண்ணிற ஆடை"பரபரப்பாக ஓடியது. நிர்மலாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. 

"நிர்மலா" என்ற பெயர் பட உலகில் பலருக்கு இருந்ததால், `வெண்ணிற ஆடை' நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார். இதுபற்றி நிர்மலா கூறுகையில், "வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது" என்று குறிப்பிட்டார்

ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு திருமணம் ஆகவே இல்லை 


பாலசந்தருக்கு ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் காரணம்.......


பாலசந்தருக்கு ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் காரணம்.......
ஆண், பெண்ணுக்கு இடையிலான நேசமும் உறவும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குத் தேவை. ஆனால் ஆதிகாலத்திலிருந்து ஆண்-பெண் உறவு என்பது சிக்கலாகவும், பேதங்கள் நிரம்பியதாகவுமே இருந்துவருகிறது. அந்தச் சிக்கல்களைக் குடும்பம் என்ற அமைப்பு மேலும் சிடுக்காக்கியது.
ஆனால் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு குடும்பத்துக்கு நிகராக இதுவரை வேறு எந்த அமைப்பும் உருவாக்கப்படவில்லை. 


குடும்பம் என்ற அமைப்பால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் வேட்டையாடப்படுபவர்களாகவும் சரித்திரம் முழுக்கப் பெண்களே இருக்கின்றனர். நிலைப்பாடுகளை முன்வைத்து ஆண்கள் வெளியேறிவிடலாம். ஆனால் பெண்கள் வெளியேற முடியாத நிலையே இன்னமும் உள்ளது. வெளியேற முடியாத அந்தப் பெண்ணைப் பல நிறபேதங்களுடன் தமிழ் சினிமாவில் படைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர்.
தடை தாண்டும் நாயகிகள்

தமிழ் சினிமாவில் பாலசந்தருக்கான இடம் எழுத்துலகில் ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரனின் இடத்துக்குச் சற்றே நெருங்கிவருவது. 20-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் இந்தியப் பெண்கள், கல்வி மற்றும் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு சம்பிரதாயமான தடைகளைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவள் வீட்டைக் கடந்து தெருவையும் தாண்டி, பேருந்தில் ஏறி அலுவலகத்துக்குப் போகிறாள்.
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாக ஒருவர் சொல்லிவிட முடியும். ஆனால் இதற்காக இந்தியாவின் முதல் தலைமுறைப் பெண்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டுக்கும் வெளிக்கும் இடையே பெண் நடத்திய போராட்டத்தை ஜெயகாந்தன் முதலான படைப்பாளிகள் கதைகளாகப் படைத்தார்கள். 

பாலசந்தர் அவர்களை நாயகிகளாக்கினார்.
பாலசந்தருக்கு முன்பு தமிழ் சினிமாவில் பெண்கள் வலிமையாக படைக்கப்பட்டதில்லையா? படைக்கப்பட்டிருக்கிறார்கள்தான். அன்பான அம்மாவாக, அருமை யான சித்தியாக, கொடுமைக்கார அத்தையாக, தியாக மனைவியாக, வஞ்சகமாக வீழ்த்தும் தாசியாக அவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வை கொண்டே படைக்கப் பட்டார்கள்.

பாலசந்தர் படங்களில்தான் தனித்துவம் கொண்டவர்களாக, தங்களது தரப்பை வெளிப்படுத்தும் தனி ஆளுமைகளாகப் பெண் கதாபாத்திரங்கள் உருவானார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டுத் தப்பிக்க நினைப்பவர்கள் என்றாலும் சம்பிரதாயமாக மீண்டும் குடும்பத்தின் வலைக்குள் விழுபவர்கள்தான்.

வீழ்த்தும் குடும்பச் சூழல்

கே. பாலசந்தர் படைத்த நாயகிகள் சற்றே அதிகப்பிரசங்கிகள்தான். கதாபாத்திரத்தை மீறிய புத்திசாலித்தனத்தைக் காட்டுபவர்கள்தான். ஆனால் பெண்கள் முதலில் பேசத் தொடங்கிய காலகட்டத்தில், தன்னிறைவான வாழ்க்கையை நோக்கிப் பெண்கள் சிந்திக்கத் தொடங்கிய சமூகச் சூழலின் பின்னணியை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் இங்குள்ள வாழ்க்கையின் சகல நிறைகுறைகளோடும் இருப்பவர் கள்தான். 

அவர்கள்தான் கே. பாலசந்தரின் நாயகிகள். 

காதல், கலப்பு மணம், சம்பிரதாய மணம் என எல்லாத் திருமணங்களிலும் பெரும்பகுதியாக ருசிபேதமே வாடிக்கையாக இருக்கிறது. ஏதோ ஒரு பொருத்தமின்மை வாழ்க்கை முழுவதும் உணரப்படுகிறது. அனுசரணையான, அன்பான ஒரு பெண்ணுக்குக் குரூரமான, ஒடுக்கும் பண்புள்ளவன் கணவனாக அமைந்துவிடுகிறான். பண்பான ஒரு ஆண்மகனுக்கு வாய்ப்பவள் ராட்சசியாக இருக்கிறாள். 

அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக இந்திய-தமிழ் சூழலில் எதிர்கொள்ளும் கதைகளை, நுட்பமான வேறுபாடுகளுடன் விதவிதமாகக் கையாண்டவர் கே. பாலச்சந்தர். நாயகிகளை மட்டுமல்ல, ஒரு காட்சியில் வந்து போகும் துணைப் பெண் கதாபாத்திரங்களையும் மறக்க முடியாமல் செய்தவர். 
மன்மத லீலையில் உடலின் நிலையாமை குறித்து சபல நாயகனுக்கு அறிவுறுத்தும் நர்ஸ் ரீனா கதாபாத்திரம் குறுகிய நேரமே வந்தாலும் வலிமையானது.

புதிய பரிமாணம்

அலுவலகத்திலும், சமூக வெளியிலும் மிக நாகரிக மாகவும், பண்பானவர்களாகவும் இருந்துகொண்டே குடும்பத்துக்குள் குறிப்பாக மனைவியிடம் நுட்பமான குரூரங்களை வெளிப்படுத்தும் ஆண்களை அவர் படைத்தார். தமிழ்ப் படங்கள் வழக்கமாகப் படைத்த வில்லன்கள் அல்ல அந்த ஆண்கள்.
‘அவர்கள்’ படத்தில் சாடிஸ்ட் ராமநாதனாக வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தமிழ்சினிமாவில் புதுமையானது. உணர்வுரீதியாகப் பெண்ணைக் குரூரம் செய்யும் ஆணை ரஜினிகாந்த் வழியாக அவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

அவரது பெண் கதாபாத்திரங்கள் குடும்பச்சுமை, கணவனின் கொடுமைகள் மற்றும் மைனர்தனங்கள் என அத்தனை சுமைகளையும் தாங்குபவர்கள். எல்லாச் சுமைகளையும் தாங்கி அனைத்துத் தடைகளையும் உடைத்து ஒரு சுதந்திரமான, தன்னிறைவு மிக்க மகிழ்ச்சியை அவரது கதாபாத்திரங்கள் ஒருபோதும் அடைவதில்லை.

பாலச்சந்தர் அவரது நாயகிகளுக்கு விடுதலையை அளித்ததில்லை. திரும்பவும் அவர்கள் குடும்பத்தின் சிலுவையைச் சுமப்பவர்களாகவே வீடுதிரும்புகிறார்கள். அதைத் தாண்டிப் புரட்சிகரமாகச் செயல்பட பாலசந்தர் தனது கதாநாயகிகளை அனுமதித்ததில்லை.

தற்காலிக இளைப்பாறல்


ஆனால் தனது பெண் கதாபாத்திரங்களுக்கு வீட்டிலிருந்து கொஞ்ச காலம் வெளியேறும் வாய்ப்பைத் தற்காலிக அரவணைப்பின் இளைப்பாறுதல்களை, பாலுறவு அல்லாத வெளி ஆண்களின் நட்பு வெளி சாத்தியங்களை அளித்ததுதான் கே. பாலசந்தர் செய்த பங்களிப்பு. அவரது காலம் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் சார்ந்து அதுவே அவரது சாதனையும்கூட.

மூன்று முடிச்சு, 
மன்மத லீலை, சொல்லத்தான் நினைக்கிறேன், 
அபூர்வ ராகங்கள், 

அச்சமில்லை அச்சமில்லை என அத்தனை படங்களிலும் பெண்கள்தான் கதையின் சூத்திரதாரிகள். 

கே. பாலசந்தர் கையாண்ட சினிமாவின் உள்ளடக்கமும் அழகியலும் எவ்வளவோ மாறிவிட்டது. பாலசந்தர் காலத்திய கட்டுப்பெட்டித்தனங்களையும் தமிழ்ச் சமூகம் கைவிட்டு எத்தனையோ வகையில் முன்னேறிவிட்டது.

இன்று பெண் குழந்தைகள் எல்லோரும் கல்வி பெறுவது கூடுமானவரை சாத்தியமாகியுள்ளது. ஆண்களுக்கு இணையாக சம்பாதிப்பதும் பணிபுரிவதும் அரசியலில் பங்குபெறுவதும் நிகழ்ந்துள்ளன. பொதுவெளிகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக வரும் தமிழ் சினிமாக்களில் நினைவுகூரத்தக்க அளவுக்கு ஒரு பெண் கதாபாத்திரமாவது படைக்கப்பட்டுள்ளதா?

மென்பொருள் துறை தொடங்கி எழுத்து, கலைத்துறை வரை சாதித்த தமிழ்ப் பெண்களைப் பிரதிபலிக்கும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் கதாபாத்திரத்தைத் தமிழ் சினிமா படைத்துள்ளதா? பாலிவுட்டில் குயின், கஹானி, ஹீரோயின், சாத் கோன் மாஃப், மேரி கோம் போன்ற படங்கள் பெண்ணை மையப்பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளன.


தமிழ் படங்களைப் பொருத்தவரை பெண்கள் ஆண்களின் இச்சைக்குரியவர்களாக, கேலிக்குரியவர்களாக, ஆதிக்கத்துக்குரியவர்களாக, பாலியல் தேவையை நிறைவு செய்யும் பொம்மை களாகவே குறுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றிடத்தில் இருந்துதான் இயக்குநர் கே.பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்கள் எத்தனை வலிமையுடன் இருந்தார்கள் என்பதை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அவரது பங்களிப்பையும்.

கே. பாலசந்தர் தனது பெண் கதாபாத்திரங்களை நேசித்தார். 
மரியாதை செய்தார். 
அவர்களைப் போஷித்தார். 

அவர்களை வளர்த்தார். 
அவர்களுக்குப் பேசும் வாய்ப்பை அளித்தார். 

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முற்றத்தில் திரைத்துறையினர் இருந்ததுபோக ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் காரணம் நமக்குப் புரியும். 
வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத மரியாதை அது.